search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல் முருகன்"

    • நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.

    சென்னை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

    'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

    இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.


    இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.

    'கண்டமிதில்' என்பதற்கு பதிலாக 'கண்டமதில்' என பாடி விட்டனர்.

    இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அதை மீண்டும் பாடும்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொன்னார். அதனை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது.

    அப்போது பாடல் வரியில் 'புகழ்' மணக்க என்பதை 'திகழ்'மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினார்கள்.

    இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.

    தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்," அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. 2 முறை பாடல் தவறாக பாடப்பட்டது. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறப் போகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி பதவி விலகுவாரா?. தமிழக அரசின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?" என சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    • நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.
    • ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ்காரர், அருந்ததியர் மக்களுக்காக எல்.முருகன் போராடியது உண்டா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.

    * அருந்ததியினர் இடஒதுக்கீட்டிற்காக சட்ட போராட்டம் நடத்தி உள்ளோம்.

    * ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    * தேர்தலின்போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு டேட்டா கொடுத்தது பாஜக தான்.

    * கடைநிலை பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என திருமா நினைக்கிறாரா.

    * 7 நீதிபதிகள் தீர்ப்பை சேலஞ்ச் செய்கிறார் என்றால் திருமாவின் நோக்கம் என்ன?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவுக்கு தகுதியில்லை என்று கூறினார்.

    • திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே எங்கள் கனவு என்றார் வன்னி அரசு.
    • திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது என்கிறார் மத்திய மந்திரி எல்.முருகன்.

    நாமக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது.

    இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

    எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?

    உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்?

    இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.

    நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம் என தெரிவித்தார்.

    • தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும்.
    • திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில நேற்று மாலை நடந்த இந்தி மாத கொண்டாட்டம் நிறைவு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...' என்ற வரியை விட்டு விட்டு பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமருக்கும் கடிதம் எழுதினார். கவர்னரை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார். அதில் அவர், 'எனக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியும். பக்தி சிரத்தையுடன் அதை பாடுவேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த விளக்கத்துக்கு நேற்று நள்ளிரவு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்த்தாய் வாழ்த்து தெரிந்திருந்தால், அதில் ஒரு வரியை பாடாமல் விட்ட போது நிறுத்தி இருக்கலாமே அதை ஏன் கவர்னர் செய்யவில்லை?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பெங்களூரு விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் தமிழ்த்தாய் வாழ்த்து-கவர்னர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு எல்.முருகன் பதில் அளித்து கூறியதாவது:-

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும். இந்தி மாதம் மத்திய அரசு துறைகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

    2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க.வினர் மந்திரியாக இருந்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் இருந்த காலத்தில் இந்த விழாக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. இந்த விழா ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான்.

    தமிழை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து சென்றதிலும் முதன்மையாக இருப்பது பிரதமர் நரேந்திரமோடிதான். திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிரதமர் சுற்றுப் பயணம் செய்கின்ற அனைத்து நாடுகளிலும் கலாசார மையம் தொடங்கப்பட்டு வருகிறது. 35 நாடுகளில் திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலக நாடுகளுக்கு அறிய செய்தவர்.

    ஐ.நா. சபையில் பிரதமர் உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். தமிழை காப்பாற்றுவதில் பிரதமருக்கே முதல் இடம்.

    முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானது. இப்போது எங்கே பிரச்சனை என்றால் நமது இந்த விவகாரத்தை இந்தியா கூட்டணியினர் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    காலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் டுவிட் போடுகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்தவர்களும், காங்கிரசை சேர்ந்தவர்களும் ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையும் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா? என்று தேடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள்.

    ஆனால் இதில் கவர்னரை தொடர்புபடுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. எந்த விதத்திலும் தர்மமும் கிடையாது. எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது.

    இன்று மழை வெள்ளத்தை தி.மு.க. அரசாங்கம் சரியாக கையாளவில்லை. ஒருநாள் மழையை சமாளிக்கவே அவர்கள் சரியாக திட்டமிடவில்லை. இதையெல்லாம் மக்களிடம் திசை திருப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இந்தியா கூட்டணியினர் கொஞ்சம் கூட யோசிக்காமல், அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த விஷயத்தை கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. அந்த தவறுக்கு கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்.

    இதில் அரசியல் செய்வது மிக தெளிவாக தெரிகிறது. இது 1960 கால கட்டங்கள் அல்ல. தி.மு.க. நினைக்கும் அரசியலை இப்போது பண்ண முடியாது. மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.

    நாம் யாருமே இந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது.

    இந்தியை எதிர்க்கும் தி.மு.க.வினர் தாங்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நடத்த மாட்டோம் என இழுத்து மூடத் தயார் இல்லை. ஏனென்றால் அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.

    மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனி நடக்காது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யுங்கள். டாஸ்மாக்கை ஒழியுங்கள். நீங்கள் இந்த நாடகத்தை எதற்காக நடத்துகிறீர்கள். சென்னை மழை வெள்ள பாதிப்பை தி.மு.க. சரியாக கையாளவில்லை. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப இதை செய்கிறீர்கள். அதனால் கவர்னர் பக்கம் திசை திருப்புகிறார்கள்.

    சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளை சீர் செய்யாமல் மழை வெள்ளத்தை தடுக்க முடியாது. 60 ஆண்டுகள் ஆண்டு விட்டு இந்த சின்ன யோசனை கூட அவர்களுக்கு இல்லை.

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை தி.மு.க.வினர் திசை திருப்புவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
    • குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னை வெள்ளத்தை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை பெரிதாக்குகின்றனர்.

    * டிடி தமிழ் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை என்பது முற்றிலும் மக்களை திசை திருப்பும் செயல்.

    * யாதும் ஊரே யாவரும் கேளிர் என வெளிநாடுகளில் தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.

    * நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு சிறப்பு விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி எப்படி பொறுப்பாவார்.

    * திமுக-வினர் கவர்னர் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டது.

    * நடந்த தவறுக்கு டிடி சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டனர்.

    * குழந்தைகள் தவறிழைத்ததற்கு கவர்னரை தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

    * இந்தி மாதம் என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போதும் நடைபெற்றது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பா.ஜ.க.வில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.

    தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக ரெயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க தி.மு.க. ரெயில் விபத்தில் நாடகமாடி வருகிறார்கள்.

    ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரெயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

    ரெயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த ரெயில்வேயும் வேலை செய்யவில்லை என தி.மு.க. இந்தியா கூட்டணி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா நிகழ்ச்சியின் போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

    மெட்ரோ ரெயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள். இதற்காக நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரெயில் விபத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். தி.மு.க.வின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சியாகவே இருந்திருக்கிறது.

    பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். எந்தப்பக்கம் சென்றாலும் மனமகிழ் மன்றங்கள் தான் உள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர்.

    விஜய் வருகிற 27-ந்தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு, கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.

    விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி, ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.
    • தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது.

    * விமானப்படை அதிகாரிகள் சொன்னதைப்போல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

    * தமிழக காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது.

    * தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை என்பதை தெரிவித்த கனிமொழி பதிவை வரவேற்கிறேன் என்று கூறினார்.

    • நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
    • எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு கண்டனம்.

    திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இளைஞரை வழிமறித்த கும்பல், அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பந்தப்பட்ட இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாக நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும், வீடியோவில் இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் நடைபெறவே இல்லை என்று காவல்துறை அளித்த விளக்கம் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

    • சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும்போதே சொன்னார்.
    • கூவம் ஆற்றை சீரமைக்க ரூ.500 கோடி செலவு செய்ததற்கான வெள்ளையறிக்கையை மேயர் பிரியா வெளியிட வேண்டும்.

    தூத்துக்குடி:

    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார்.

    ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

    இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

    மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

    தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
    • எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.

    இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.

    கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

    கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.

    4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.
    • விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    * முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் தோல்வியை மறைக்கவும், அமெரிக்க பயணத்தை பற்றி மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவும் திருமாவளவன், முதலமைச்சர் இணைந்து நாடகம் நடத்தி உள்ளனர்.

    * முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.

    * தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.

    * விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
    • தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய மந்திரி எல்.முருகன் முகாம் அலுவலகம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

    இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

     

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக டாஸ்மாக் கடை திறந்து மக்களை தி.மு.க. அரசு மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது.

    ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று தமிழக அரசுக்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அரசு கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க தி.மு.க. அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி அதனை தி.கவும், தி.மு.க.வும் அழிக்க நினைத்தால் அது முடியாது. இன்றைக்கு தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது.

    தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரும் இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

    ஒரே நாடு, ஒரே சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. அரசு கட்டி முடித்துள்ளது. 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×